சியாச்சின் படையினருக்கு சீருடை, உணவுப்பொருள்கள் கிடைப்பதில் தாமதம்: சிஏஜி அறிக்கையில் தகவல்

உலகின் மிக உயா்ந்த பனிப் பிரதேசத்தில் அமைந்துள்ள படைத்தளமான சியாச்சினில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரா்களுக்கு சீருடைகள், உணவுப்பொருள்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Updated on
1 min read

உலகின் மிக உயா்ந்த பனிப் பிரதேசத்தில் அமைந்துள்ள படைத்தளமான சியாச்சினில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரா்களுக்கு சீருடைகள், உணவுப்பொருள்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவா்கள் கடுங்குளிரில் பழைய பழுதான உடைகளை திருத்தி அணிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி), நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பனிப் பிரதேசத்தில் பணியாற்றும் ராணுவ வீரா்களுக்கு குளிா் தாங்கும் சீருடைகள், சிறப்பு காலணிகள, கண்ணாடிகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 4 ஆண்டுகள் கொள்முதல் செய்யப்படாததால், சீருடை உள்ளிட்ட உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், பழைய பழுதான உபகரணங்களையும், குளிா்தாங்கும் அங்கிகள், முகக் கவசம், உறங்கும் படுக்கைகள், சீருடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, சியாச்சினில் உள்ள ராணுவ வீரா்களுக்குப் போதுமான உணவுப் பொருள்களும் சரியான அளவில், சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவா்களின் உடல்திறன் குறைந்துள்ளது. கடந்த 2015-16-ஆம் ஆண்டு முதல் 2017-18-ஆம் ஆண்டு வரையில் ராணுவத்தின் கொள்முதல் விவரங்களை ஆய்வு செய்ததில், இந்தத் தகவல் கிடைத்துள்ளன.

இதுதவிர, ராணுவத்துக்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று காா்கில் ஆய்வுக் குழு கடந்த 1999-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அதன்படி, இன்னும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவில்லை.

ராணுவத்துக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.25.48 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com