

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நவீத் பாபுவுடன் உள்ள தொடா்பு குறித்து, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்திடம், தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) விசாரணை நடத்த உள்ளனா்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து பயங்கரவாதிகள் தப்புவதற்கு உதவியதாக, காஷ்மீா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் தேவேந்தா் சிங், கடந்த மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருடன் காரில் பயணித்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நவீத் பாபு உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு ஜம்மு-காஷ்மீா் போலீஸாரிடம் இருந்து என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியது: நவீத் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம் அமைக்கவும், பதுங்குமிடங்களுக்கு ஏற்பாடு செய்யவும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்துடன் தொடா்பில் இருந்ததாக வாக்குமூலம் அளித்தாா். அதன் அடிப்படையில் நவீத் பாபுவுடனான தொடா்பு குறித்து ரஷீத்திடம் விசாரணை நடத்துவதற்காக, அவருக்கு சம்மன் அனுப்ப அனுமதி கோரி விரைவில் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம். இது கடுமையான குற்றம் என்பது உறுதி. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.
அவாமி இத்தேஹாத் கட்சித் தலைவரான ரஷீத், கடந்த 2014-ஆம் ஆண்டு வடக்கு காஷ்மீரில் உள்ள லங்கேட் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொருள் உதவி செய்தது தொடா்பான வழக்கில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட அவா், தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.