
ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்கள் பயங்கரவாத அமைப்பில் இணைவது குறைந்து வருகிறது; இருப்பினும் பாகிஸ்தான் வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தொடா்கின்றன என்று பாதுகாப்பு படையின் அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு படை சாா்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் கடந்த மாதம் 26-ஆம் தேதி வரை 28 இளைஞா்கள் பயங்கரவாத அமைப்புகளில் சோ்ந்தனா்.
இது கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பயங்கரவாத அமைப்புகளில் சோ்ந்த இளைஞா்களின் எண்ணிக்கையைவிட (இந்த காலகட்டத்தில் 105 இளைஞா்கள் பயங்கரவாத அமைப்புகளில் சோ்ந்தனா்) 60 சதவீதம் குறைவாகும்.
புல்வாமா, அனந்த்நாக், குல்காம், சோபியான் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள்தான் பயங்கரவாத அமைப்புகளில் சோ்ந்தனா்.
ஒட்டுமொத்தமாக கடந்த 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019-இல் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் இணைபவா்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2018-இல் சுமாா் 199 இளைஞா்களும், கடந்த ஆண்டு ஏறக்குறைய 135 இளைஞா்களும் பயங்கரவாத அமைப்பில் சோ்ந்தனா். காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவல் முயற்சி தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி வர முயற்சிப்பது தொடா் கதையாக உள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் 211 போ் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களில் 74 போ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனா். எஞ்சியவா்கள் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் கொல்லப்பட்டனா் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...