
உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் உள்ள ஒரு உணவகத்தில் கல்லூரி மாணவி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளன.
பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவி ஒரு இளைஞருடன் ஹத்ராஸில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரத்துக்கு பின் உணவகத்தின் ஊழியர் அந்த பக்கம் செல்லும்போது மாணவி அங்குள்ள சோபாவில் இறந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர் உடனே அங்கிருந்த அலாரத்தை அடித்துள்ளார். சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் பன்சால் கூறுகையில்,
20 வயது கல்லூரி மாணவி ஒரு இளைஞருடன் நேற்று உணவகத்துக்கு வந்துள்ளார். அவர் அவளின் தாய் மாமன் என்று சொல்லப்படுகிறது. தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி இருக்கலாம். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாணவி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி குற்றவாளி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...