நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி திஹார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை தில்லி பட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி திஹார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை தில்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் இருமுறை தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தேதிகள் அறிவிக்கப்பட்டு அவர்களது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி திஹார் சிறை நிர்வாகம் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. 

இதில், குற்றவாளிகள் சட்டத் தீர்வுகளை காண தில்லி உயர்நீதிமன்றம் ஏழு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. எனவே, குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை தற்போது அறிவிக்க முடியாது. கால அவகாசம் முடிந்த பின்னர், சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

முன்னதாக, குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது பிப்.5ம் தேதி விசாரணை நடத்திய தில்லி உயர்நீதிமன்றம், 'நால்வரையும் தனித் தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்றும், அவர்கள் நால்வரும் ஏழு நாள்களில் தங்களுக்குள்ள சட்டத் தீர்வுகளை காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

நிர்பயா வழக்கு

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி (நிர்பயா) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகள் 6 பேரில் ஒருவரான ராம்சிங், விசாரணையின்போது திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.

இதர நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com