
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி மாலை 6.35 மணி நிலவரப்படி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆம் ஆத்மி 43 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 24 தொகுதிகளில் ஆம் ஆத்மி 19 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தில்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி ஏற்கெனவே 43 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியும் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி:
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துகள்.
பிரதமர் நரேந்திர மோடி:
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் வாழ்த்துகள். தில்லி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய அவர்களை வாழ்த்துகிறேன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...