மூன்றாவது முறையாக முதல்வராகிறார் கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை  கூடியிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவிக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கூடியிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவிக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தில்லி முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக கேஜரிவால் பதவியேற்க உள்ளார்.

மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 8  இடங்களில் வென்றது. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். 
தலைவர்கள் வாழ்த்து: தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிஅமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கேஜரிவாலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தேர்தல் வெற்றிக்கான உத்திகளை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்தான், இந்தத் தேர்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கு பிரசார உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டம்: தேர்தலில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பலூன்களை பறக்கவிட்டும், ஆடிப் பாடியும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டும் வெற்றியைக் கொண்டாடினர். சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், பட்டாசுகளை வெடிக்கும் செயலில் இறங்க வேண்டாம் என முன்னதாக கேஜரிவால் கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட பிராந்திய கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனை, ராஷ்ட்ரீய லோக் தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியையே தழுவின.

தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள் போட்டியிட்ட போதிலும் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி,களத்தில் இருந்தபோதிலும் தேர்தலை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், ஏறக்குறைய 8 மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. கட்சியை மீட்டு எடுக்க கட்சித் தலைமையிலும் அடிமட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக அக்கட்சியின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். எனது கணிப்புகள் பொய்யாகிவிட்டன. பாஜகவினர் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர், துணை முதல்வர் வெற்றி: இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்களில் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் கோபால்ராய், சத்யேந்தர் ஜெயின் மற்றும் புதுமுகங்களான ராகவ் சத்தா, அதிஷி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கேஜரிவால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுனில்குமார் யாதவை சுமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது பின்னணியில் இருந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசி நேரத்தில் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2015 பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 67 இடங்களை வென்றது. பாஜகவுக்கு மீதமுள்ள 3 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

புது வகையான அரசியலுக்கு மக்கள் அடித்தளம்
புது வகையான அரசியலுக்கு தில்லி மக்கள் அடித்தளமிட்டுள்ளனர் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய வெற்றி உரை: 

தில்லியில் இலவச மின்சாரம், குடிநீர், உலகத்தரமான கல்வி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியே இது. 
இந்த வெற்றி மூலம், புது வகையான அரசியலுக்கு தில்லி மக்கள் அடித்தளமிட்டுள்ளனர். பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகள், சாலைகள் ஆகியவற்றை அமைக்கும் அரசுக்கே தங்களது வாக்குகள் என்பதை மக்கள் சொல்லாமல் சொல்லியுள்ளனர். 
இந்த வெற்றியை நான் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன். இறைவனின் துணையால் தில்லியை அழகான, சுத்தமான நகராக மாற்றுவோம்.

பிரதமர் மோடி வாழ்த்து
தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், அதன் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தில்லி பேரவைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்காக, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகள். தில்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, கேஜரிவால் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களது (பிரதமர்) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தில்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்' என்று கேஜரிவால் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com