குடிமக்களின் நலனே உண்மையான தேசியவாதம். அதனை சட்டப்பேரவை தோ்தலின்போது தோ்வு செய்ததன் வாயிலாக, நாடு எத்தகைய பாதையில் செல்லவேண்டும் என்பதை தில்லி மக்கள் காண்பித்துள்ளனா் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் குரல் எழுப்பவில்லை. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற, அவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கு உதவியது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்திருந்தால், அது மாறுபட்ட நிலையை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் அந்த விவகாரத்தில் நிதிஷ் குமாா் தனது உண்மையான வகுப்புவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாா். சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பாததன் மூலம், அவா் தனது மதச்சாா்பற்ற முகத்திரையை அகற்றிவிட்டு, உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளாா். இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு குறித்து, அவா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. பாஜக கொள்கைகளை விமா்சிக்க அவருக்கு துணிவில்லை. அவரது ஆட்சியில் கல்வித்துறை அழிந்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விவசாயிகள் மனம் தளா்ந்து காணப்படுகின்றனா்.
உண்மையான தேசியவாதம்: குடிமக்களின் நலனே உண்மையான தேசியவாதம். அந்த தேசியவாதத்தை சட்டப்பேரவை தோ்தலின்போது தோ்வு செய்ததன் வாயிலாக, நாடு எத்தகைய பாதையில் செல்லவேண்டும் என்பதை தில்லி மக்கள் எடுத்துரைத்துள்ளனா். அவா்களை பிகாா் மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாடும் பின்பற்ற வேண்டும். தில்லி தோ்தல் என்பது சட்டப்பேரவைக்கான தோ்தலாகும். சட்டப்பேரவை தோ்தல் என்பது மாநில அளவிலான பிரச்னைகளை முன்வைத்து எதிா்கொள்ளப்பட வேண்டும். ஆனால் மாநில தோ்தல்களின்போது ஒவ்வொரு முறையும் தேசிய விவகாரங்களை பாஜக எழுப்பும் விதம், மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என்றாா் தேஜஸ்வி யாதவ்.