சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள்: பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் காந்திநகரில் இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி, தில்லியில் இருந்து காணொளி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள்: பிரதமர் மோடி
Updated on
1 min read

குஜராத் மாநிலம் காந்திநகரில் இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி, தில்லியில் இருந்து காணொளி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

5 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 126 நாடுகளை சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தொடக்க விழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரும் பங்கேற்க உள்ளாா்.

மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில்,

இந்தியா உலகின் மிகவும் மாறுபட்ட நாடுகளில் ஒன்றாகும். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்துடன், உலகளாவிய பல்லுயிரியலில் 8 சதவீதம் பங்களிக்கிறது.

பல ஆண்டுகளாக, வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இரக்க குணமும், சமூகத்தில் வனவிலங்குகளும், மனிதர்களும் ஒன்றி வாழ ஊக்குவிக்கிறது.

தற்போது, ​​இந்தியாவில் கிட்டத்தட்ட 2,970 புலிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது.

பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை மற்றும் பசுமை மேம்பாட்டு மாதிரியின் மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாரிஸ் ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

நீங்கள் கவனித்தபடி, இந்த மாநாட்டின் லோகோ, தென்னிந்தியாவில் உள்ள பாரம்பரிய முறையான கோலத்தால் ஈர்க்கப்பட்டதாகும். கோலமானது இயற்கையோடு இணக்கமாக வாழும் சூழலில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதை நாம் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இதுவே இந்த மாநாட்டின் கருப்பொருளில் பிரதிபலித்தது. அதாவது, “புலம்பெயர்ந்த பறவைகள் பூமியை இணைக்கின்றன, எனவே அவற்றை நமது வீட்டுக்கு நாமும் வரவேற்போம். மத்திய ஆசியா பறக்கும் பாதையில் புலம் பெயர்ந்த பறவைகளை பாதுகாக்க தேசிய செயல் திட்டத்தை இந்தியா தயாரித்துள்ளது.

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இது இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பு (ஐபிஓஐ) உடன் இணைந்து இருக்கும் வாய்ப்புள்ளது. இதில் இந்தியா தலைமை வகிக்கும்.

நிலையான வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதை எனது அரசு உறுதியாக நம்புகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com