நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு; புதிய தேதி அறிவிப்பு

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது தில்லி நீதிமன்றம்.
நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வருக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு; புதிய தேதி அறிவிப்பு


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது தில்லி நீதிமன்றம்.

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை தில்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 3வது முறையாக புதிய தேதி அறிவிக்கப்பட்டது.

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கான தேதியை வெளியிட்டு, புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம்.

முன்னதாக, முகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜராக, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் விரிந்தா க்ரோவர் தனக்காக வாதாட வேண்டாம் என்று முகேஷ் குமார் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, முகேஷ் குமார் சிங் தரப்பில் ஆஜராக அரசு வழக்குரைஞர் ரவி குவாஸியை நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.

அதே சமயம், திகார் சிறையில் குற்றவாளி வினய் ஷர்மா உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வினய் ஷர்மாவின் உடல்நலனை கவனிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், பவன் குப்தா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கவும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல மற்றொரு குற்றவாளி அக்சய் குமார் தரப்பில், குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com