
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவ சேனை கருத்துத் தெரிவித்துள்ளது.
சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று இது குறித்து தலையங்கம் வெளியாகியுள்ளது.
அதில், டிரம்பின் இந்திய வருகை, ஏதோ ஒரு மன்னரின் வருகையைப் போல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. டிரம்பின் வருகையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப் பின்னால் இருக்கும் குடிசையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றப்போவதில்லை.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இங்கிலாந்து மன்னர் அல்லது ராணி இதுபோலத்தான் தங்களது அடிமை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். தற்போது அமெரிக்க அதிபரின் வருகையை முன்னிட்டு குடிமக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து செலவிட்டு முன்னேற்பாடுகள் செய்வதும் அதுபோலவே உள்ளது.
குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.