
புது தில்லி: புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தில்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் இன்று காலை வந்தனர்.
காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு, நினைவிடத்தை சுற்றி வந்த டிரம்ப் - மெலானியா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று வந்த நிலையில், இன்று காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
நேற்று சபர்மதி ஆசிரமத்தில் வைத்திருந்த விருந்தினர் பதிவேட்டில், ஆசிரமம் பற்றியோ, காந்தியைப் பற்றியோ எழுதாமல், பிரதமர் மோடியைப் பற்றி எழுதியிருந்தது நேற்று சர்ச்சையான நிலையில், இன்று அவரது நினைவிடத்தில் இருக்கும் விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோா் குஜராத்தின் ஆமதாபாதுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். விமான நிலையத்திலிருந்து சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்ற அவா்கள், பின்னா் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா்.
லட்சக்கணக்கான நபா்களின் முன்னிலையில் அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியும் உரையாற்றினா். இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப், மெலானியா டிரம்ப் ஆகியோா் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேசம் சென்றடைந்தனா். ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G