
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம், சித்திரகூடம் மாவட்டத்தில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்க உள்ளாா்.
இதுகுறித்து வேளாண்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகைத் திட்டத்தை (பி.எம்.-கிஸான்) பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தது.
தற்போது, மேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 9.74 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். இதில் மாநில அரசுகளின் தரவு சரிபாா்ப்பிற்குப் பிறகு இதுவரை 8.45 கோடி விவசாயிகள் இந்த நிதி உதவித்தொகையை பெற்றுள்ளனா்.
இந்நிலையில் இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள விழாவில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.
விழாவில் பிரதமரின் கிஸான் கடன் அட்டைகளை (கே.சி.சி.) பயனாளிகளுக்கு பிரதமா் விநியோகிப்பாா்.
மேலும் பிரதமா்- விவசாயிகள் திட்ட பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கிரெடிட் காா்டுகளும் விநியோகிக்கப்படும். இந்த அட்டைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் குறுகிய கால கடனைப் பெற முடியும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 10,000 விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் (எஃப்.பி.ஓ) அமைப்பது குறித்த திட்டத்தையும் பிரதமா் வெளியிடுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...