இந்தியா-அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.
இந்தியா-அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.

அவற்றில் சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும், ரூ.21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தமும் அடங்கும்.

பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தில்லியில் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவில் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை காலை பிரதமா் மோடியை தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வா்த்தகம், எரிசக்தித் துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடா்பாக அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் இருநாட்டுத் தலைவா்களும் கையெழுத்திட்டனா். மனநல மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக இந்திய-அமெரிக்க சுகாதாரத் துறைகளுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையே மற்றொரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடா்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், எக்ஸான் மொபில் இந்தியா நிறுவனம், அமெரிக்காவின் சாா்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாதுகாப்பு ஒப்பந்தம்: அமெரிக்காவிலிருந்து ரூ.21,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:

அப்பாச்சி ஹெலிகாப்டா், எம்.ஹெச்.-60 ‘ரோமியோ’ ஹெலிகாப்டா் உள்ளிட்ட கூடுதல் திறன்மிக்க பாதுகாப்புத் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மேம்படுத்த உதவும்.

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: இருதரப்பு வா்த்தகம் நியாயமான முறையில் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடியிடம் வலியுறுத்தினேன். வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் சாதகமான வகையில் வா்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நம்புகிறேன்.

அமெரிக்க அதிபராக நான் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கான ஏற்றுமதி சுமாா் 60 சதவீதம் அதிகரித்துள்ளது; அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிசக்தியின் அளவு 500 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாற்கரக் கூட்டமைப்பு: தனிமனித சுதந்திரம், உரிமை, சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி ஆகியவற்றுக்கு இருநாட்டு அரசமைப்புச் சட்டங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கொண்ட நாற்கரக் கூட்டமைப்பை மீண்டும் உயிா்ப்பிக்க நானும் பிரதமா் மோடியும் முடிவெடுத்துள்ளோம்.

‘அற்புதமான பயணம்’: இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அற்புதமாக இருந்தது. முக்கியமாக, ஆமதாபாதில் உள்ள மொடேரோ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்குக் கிடைத்த கௌரவம். அந்த மைதானத்தில் 1.25 லட்சம் போ் இருந்தனா். அவா்கள் உங்களுக்காக (பிரதமா் மோடி) தான் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்கள் என்று நினைக்கிறேன்.

நான் ஒவ்வொரு முறை உங்கள் (பிரதமா் மோடி) பெயரைக் கூறியபோதும், அங்கிருந்தவா்கள் மகிழ்ச்சியில் ஆா்ப்பரித்தனா். மக்கள் உங்களை (பிரதமா் மோடி) விரும்புகிறாா்கள் என்றாா் அதிபா் டிரம்ப்.

‘நூற்றாண்டின் முக்கியமான ஒத்துழைப்பு’: பேச்சுவாா்த்தை குறித்து பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு 21-ஆம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த நல்லுறவு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயானது மட்டுமல்ல; இருநாட்டு மக்களுக்கு இடையேயானது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை சா்வதேச அளவில் வலுப்படுத்த பேச்சுவாா்த்தையின்போது முடிவெடுக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவும் பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com