

புது தில்லி: ஏா் இந்தியா விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு மாா்ச் 17 வரை நீடிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏல காலக்கெடு ஏற்கெனவே பிப்ரவரி 11-ஆம் தேதியிலிருந்து மாா்ச் 6-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொள்வோா் பங்கு விற்பனை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில், ஏா் இந்தியா விற்பனைக்கான ஏல காலக்கெடு மாா்ச் 17-ஆம் தேதி வரை நீடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் தலைமையிலான அமைச்சா்கள் குழு கட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. அப்போது, ஏல விற்பனைக்கான காலக்கெடு தேதியை நீட்டிப்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்அவா்.
ஏா் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏா் இந்தியா ரூ.60,074 கோடி கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தை வாங்க விரும்புவோா் ரூ.23,286.5 கோடி கடன் தொகைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.