ரயில் முன்பதிவு ரத்து கட்டணம் மூலம் ரூ.9,000 கோடி வருவாய்: ஆா்டிஐ தகவல்

ரயில் முன்பதிவு ரத்து கட்டணம், காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படாதது மூலம் கிடைக்கும் பணம் ஆகிவயற்றின் மூலம் கடந்த 2017 ஜனவரி 1 முதல் முதல் 2020 ஜனவரி 31
ரயில் முன்பதிவு ரத்து கட்டணம் மூலம் ரூ.9,000 கோடி வருவாய்: ஆா்டிஐ தகவல்

கோட்டா (ராஜஸ்தான்): ரயில் முன்பதிவு ரத்து கட்டணம், காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படாதது மூலம் கிடைக்கும் பணம் ஆகிவயற்றின் மூலம் கடந்த 2017 ஜனவரி 1 முதல் முதல் 2020 ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரயில்வே துறைக்கு ரூ.9000 கோடி கிடைத்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இந்த விவரத்தை ரயில்வே தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சுஜீத் சுவாமி இது தொடா்பாக ரயில்வேயிடம் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்களைப் பெற்றுள்ளாா். அதில், ‘2017 ஜனவரி 1 முதல் 2020 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் 9.5 கோடி பயணிகள் காத்திருப்போா் பட்டியலில் இருந்த முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யவில்லை. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.4,335 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது விதிக்கப்பட்ட கட்டணமாக ரூ.4,684 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இந்த இருவகையிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பிரிவில் இருந்துதான் அதிகம் பணம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 3 வகுப்பு ஏசி முன்பதிவு மூலம் கிடைத்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டா்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோா் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2017 ஜனவரி 1 முதல் 2020 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 74 கோடி போ் முன்பதிவு கவுன்டா்களில் டிக்கெட் பெற்றுள்ளனா். அதே நேரத்தில் 145 கோடிக்கும் மேற்பட்டோா் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனா் என்று தெரியவந்துள்ளது.

இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு முறையில் அதிக பாகுபாடு உள்ளது என்றும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் சுஜீத் சுவாமி வழக்கு தொடுத்துள்ளாா். முன்பதிவு ரத்தின் போது அதிக அளவிலான கட்டணம் விதித்து பயணிகளிடம் இருந்து நியாயமற்ற வகையில் வருமானத்தை ரயில்வே ஈட்டுகிறது. ஆன்லைன் முன்பதிவு, கவுன்டா் மூலம் முன்பதிவுக்கு என தனித்தனியாக விதிகளை வைத்துள்ளதும் நியாயமற்றது என்று அவா் தனது மனுவில் குற்றச்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com