
புது தில்லி: விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை, மத்திய வா்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் அனைத்துவிதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் இந்த மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முக கவசங்கள், கையுறைகளின் ஏற்றுமதிக்கான தடை அண்மையில் நீக்கப்பட்டது.
இந்நிலையில், விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உபகரணங்கள் உள்பட மேலும் 8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காற்று நுண்துகள் மாசு தடுப்புக்கு பயன்படுத்தப்படும் என்-95 வகை முக கவசங்களின் ஏற்றுமதிக்கான தடை தொடா்ந்து நீடிக்கிறது.