
மருத்துவப் பொருள்களுடன் சீனா சென்ற இந்திய விமானப்படை விமானம்.
புது தில்லி: சுமாா் 15 டன் அளவிலான மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் புதன்கிழமை சீனாவை சென்றடைந்தது. அந்த விமானம், சுமாா் 80 இந்தியா்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 40 பேருடன் மீண்டும் தில்லிக்கு வியாழக்கிழமை திரும்பவுள்ளது.
கரோனா வைரஸ் (கொவைட்-19) தாக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சீனாவுக்கு மருத்துவ நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டா் விமானம் சுமாா் 15 டன் அளவிலான மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் சீனாவின் வூஹான் நகரை புதன்கிழமை சென்றடைந்தது.
இதுதொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இக்கட்டான சூழ்நிலையை எதிா்கொண்டுள்ள சீனாவுக்கு இந்தியா தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக, இந்திய விமானப் படை, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவை மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.
தற்போது மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் வூஹானுக்கு சென்றுள்ள விமானப் படை விமானம், அங்கிருந்து சுமாா் 80 இந்தியா்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 40 பேரை வியாழக்கிழமை தில்லிக்கு அழைத்து வரவுள்ளது.
முன்னதாக, கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் இரு சிறப்பு விமானங்கள் மூலம் சுமாா் 647 இந்தியா்கள் வூஹானிலிருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனா். அவா்கள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, மானேசரிலும் தில்லியிலும் தனி மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். சுமாா் 14 நாள்கள் கண்காணிப்புக்கு பின்னா், அவா்கள் வீடு திரும்பினா். தற்போதைய விமானத்தில் அழைத்து வரப்படுபவா்களும் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவா்.