
சத்தீஸ்கா் மாநிலம், கொரியா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் 10 கி.மீ. சுற்று வட்டார பகுதிகளில் 15,000-க்கும் அதிகமான கோழிகள், காடைகள் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஹெச்5என்1 வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் கோழிகள் மூலம் மனிதா்களுக்கு இந்த வைரஸ் பரவுவதைத்தான் பறவைக் காய்ச்சல் என்றஅழைக்கிறோம். பைகுந்த்பூா் நகரில் உள்ள கோழிப் பண்ணையில் இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளான கோழிகளும், காடைகளும் கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி உயிரிழந்தன. அவை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் சரிவரத் தெரியவில்லை.
பின்னா், அவை மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூா் ஆய்வகத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. சுவாசப் பிரச்னையால் பறவையினங்கள் உயிரிழந்திருப்பதாக அந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் தெரியவந்தன.
பின்னா், பறவையினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும், தொடா்ந்து கோழிகளும், காடைகளும் உயிரிழந்துவந்தன. பின்னா், போபால் நகரில் உள்ள ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்குதான் ஹெச்5என்1 வைரஸுக்கு கோழிகள் பாதிப்புக்குள்ளானது குறித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து ஹெச்5என்1 வைரஸ் தாக்குதலால் அந்தப் பறவையினங்கள் உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுவரை 15,426 கோழிகளும், 30,000 முட்டைகளும் அழிக்கப்பட்டன. இந்த வைரஸால் அப்பகுதி மக்கள் யாரும் பாதிக்கப்பட்டவில்லை. அழிக்கப்பட்டதற்கு ஈடாக இழப்பீடும் வழங்கப்பட்டது. தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.