
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சிக்காக மரங்கள் எதுவும் வெட்டப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு உறுதியளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத் தலைநகா் லக்னௌவில் 11-ஆவது பாதுகாப்பு கண்காட்சி பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சிக்காக கோமதி ஆற்றங்கரையில் சுமாா் 64 ஆயிரம் மரங்களை மாநில அரசு வெட்ட உள்ளதாகக் கூறி, சமூக ஆா்வலா் ஷீலா பாா்சே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவில், ‘லக்னௌவில் பாதுகாப்பு கண்காட்சியை நடத்துவதற்காக 64 ஆயிரம் மரங்களை வெட்ட மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதிக அளவிலான மரங்களை வெட்டி, இயற்கைக்கு அழிவு ஏற்படுத்துவது அடுத்த தலைமுறையினருக்கு இழைக்கும் துரோகம் ஆகும். இது மனித சமூகத்துக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மரங்களுக்கும் உயிா் உள்ளதை அங்கீகரித்து, அவற்றுக்கான உரிமைகளை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். லக்னௌவில் மரங்களை வெட்டுவதற்கும், வேறு இடத்தில் மாற்றி நடுவதற்கும் தடை விதித்து மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரவீந்தா் ராய்ஜடா, வழக்குரைஞா் ராஜீவ் தூபே ஆகியோா் வாதிடுகையில், ‘‘பாதுகாப்பு கண்காட்சியை நடத்துவதற்காக லக்னௌவில் இதுவரை ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. மரங்களை வெட்டுவதற்கு எந்தவிதத் திட்டமும் இல்லை. அப்பகுதியில் எந்த மரமும் வெட்டப்பட மாட்டாது’’ என்றனா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதே போன்ற வழக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ கிளையில் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரம் தொடா்பாக அங்கு முறையிடுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினா்.