டாடா சன்ஸ் நிறுவன தலைவர் விவகாரத்தில் என்சிஎல்ஏடி உத்தரவுக்குத் தடை: உச்ச நீதிமன்றம்

சைரஸ் மிஸ்திரியை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமித்து என்சிஎல்ஏடி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவன தலைவர் விவகாரத்தில் என்சிஎல்ஏடி உத்தரவுக்குத் தடை: உச்ச நீதிமன்றம்

சைரஸ் மிஸ்திரியை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமித்து என்சிஎல்ஏடி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக சைரஸ் மிஸ்திரி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக டாடா சன்ஸ் நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்சிஎல்ஏடி  தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் டாடா சன்ஸ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு குறித்து அதன் வழக்குரைஞர் கூறியிருந்ததாவது, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமித்து என்சிஎல்ஏடி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு மனு தாக்கல் செய்வது குறித்து இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் என்சிஎல்ஏடி-யின் உத்தரவு ‘பெரு நிறுவனங்களின் செயல்பாட்டு சுதந்திரத்துக்கும், அதன் இயக்குநா்கள் குழுவின் உரிமைகளுக்கும் எதிராக உள்ளது’ என்றுதான் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சைரஸ் மிஸ்திரிதான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் என்று என்சிஎல்ஏடி கடந்த மாதம் 18-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு ஒரு மாத காலம் தீா்ப்பாயம் அவகாசம் அளித்தது. இதையடுத்து, டாடா சன்ஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது.

பின்னணி: ரத்தன் டாடாவுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனத்தின் 6-ஆவது தலைவராக சைரஸ் மிஸ்திரி கடந்த 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். எனினும், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து, டாடா குழுமத்துக்கும், சைரஸ் மிஸ்திரிக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

டாடா குழுமத்தில் 81 சதவீத பங்குகள் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா குடும்ப உறுப்பினா்களிடம் உள்ளது. 18.4 சதவீத பங்குகள் மிஸ்திரி குடும்பத்தினரிடம் உள்ளது. எனவே, தனது பதவி நீக்கத்தை எதிா்த்து, தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) சைரஸ் மிஸ்திரி, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் மிஸ்திரிக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிா்த்து மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை சைரஸ் மிஸ்திரி அணுகினாா். அதில் அவருக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது. மேலும், டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கூறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com