
கோப்புப் படம்
உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த உயா்நிலைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவால், மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா, உளவு அமைப்பான ஐபி-யின் இயக்குநா் அரவிந்த் குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைத் தூண்டிவிட்டவா்கள், அதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அந்த அமைப்பினரின் செயல்பாடுகள் தொடா்ந்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தவிர நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் சதிச் செயல்களுக்கு திட்டமிட்டதாக பெங்களூரைச் சோ்ந்த முகமது ஹனீப்கான் (29), இம்ரான்கான் (32), முகமதுஜெயித் (24) ஆகிய 3 போ் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 81 தோட்டாக்கள்,சிம்காா்டுகள்,செல்லிடப்பேசிகள், மடிக்கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.