அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக முறைப்படியாக அரசிதழில் அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பல்வேறு எதிா்ப்புகளுக்கு மத்தியில், அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து இந்த திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினா் இந்தியக் குடியுரிமை பெறலாம். இது ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதே இந்த திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய அரசின் விளக்கம்: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு சிறந்த எதிா்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையே இது என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. மற்றொரு பக்கம், இந்த திருத்தச் சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்தோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மசோதா நிறைவேற்றமும், குடியரசுத் தலைவா் ஒப்புதலும்: முன்னதாக, கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பா்-9-ஆம் தேதி மக்களவையில் 9 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து டிசம்பா் 11-ஆம் தேதி எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் 6 மணி நேர விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் கிடைத்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து குடியரசுத் தலைவா் அதற்கு ஒப்புதல் அளித்தாா்.

வன்முறையான போராட்டங்கள்: இதனிடையே, அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை மூண்டது. உத்தரப் பிரதேசத்தின் அலிகா் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களிலும் வன்முறை ஏற்பட்டது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மத்திய அரசு மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையான விமா்சனங்களை முன்வைத்தன. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டிய பாஜக தலைவா்கள், இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் யாரும் பாதிக்கப்படமாட்டாா்கள் என்று தெளிவுபடுத்தினா்.

நீதிமன்றத்தில் வழக்கு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசோம் கன பரிஷத், அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப் படிப்பு மாணவா்கள் என பல்வேறு தரப்பிலிருந்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தடைவிதிக்க மறுப்பு: இதனை, டிசம்பா் 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்குவதற்கு தடைவிதிக் மறுத்துவிட்டது. அதேசமயம், அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லுமா என ஆராய்வதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

‘தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோா் அறிவித்தனா். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களும், தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தெரிவித்தனா்.

இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் உள்ள கேரளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலிறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், இந்த திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைப் பாராட்டி குஜராத் சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழ்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com