
மங்களூரு விமான நிலையத்தில் மர்மமான முறையில் கிடந்த பையில் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி,. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) அவ்விடத்திற்கு வந்து மிகவும் பாதுகாப்பாக மர்ம பையினை கைப்பற்றினர். பின்னர் சோதித்ததில் பையினுள் சக்திவாய்ந்த வெடிபொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புபடை டிஐஜி அனில் பாண்டே இதுகுறித்து கூறுகையில், 'பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், மங்களூரு விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே கிடந்த ஒரு பையில் வெடிபொருள் (ஐஇடி) இருந்ததை கண்டுபிடித்தோம். அதை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டோம். இதுகுறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.