
பேரணியில் மக்களை சந்தித்ததால் தாமதம் ஏற்பட்ட நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21. பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதன்படி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவிருந்தார். அதற்கு முன்னதாக புதுதில்லி சட்டமன்றத் தொகுதியில் சாலை மார்க்கமாக பேரணி நடத்தினார். ஏராளமான தொண்டர்களுடன் திறந்த வேனில் நின்றபடி மக்களை சந்தித்து பேசினார். இதனால் தாமதம் ஏற்பட்ட நிலையில், வேட்புமனுத் தாக்கலை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
பேரணியில் மக்களிடையே பேசிய அவர், 'நான் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவிருந்தேன், ஆனால் அலுவலகம் மாலை 3 மணிக்கு மூடப்பட்டது. பேரணியில் சந்தித்து கொண்டிருக்கும் உங்களை விட்டுவிட்டு எப்படி நான் வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்படுவது? எனவே, நாளை வேட்புமனுத் தாக்கல் செய்துகொள்கிறேன்' என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, கேஜரிவால் இரண்டு முறை தில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் தில்லி தொகுதியிலே அவர் போட்டியிட இருக்கிறார்.
இதற்கிடையே பேரணியில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தில்லி மக்களுக்காக உழைத்த திருப்தி எனக்கு இருக்கிறது என்றும் மக்கள் எங்களுக்கான மற்றொரு வாய்ப்பை அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.