
கோப்புப் படம்
உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிரெளலி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமைதான் புகார் அளித்தார். அவரது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும், அப்பெண் தனியாக இருந்த சமயத்தில், அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார்.
பின்னர் அவர்கள் அப்பெண்ணின் கழுத்தை அறுக்க முயன்றனர், ஆனால் அவர் சத்தம் எழுப்பியதால் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். அதற்கு முன்பு, இந்தச் சம்பவம் குறித்து அவர் புகார் அளிக்கத் துணிந்தால், மோசமான விளைவுகளை ஏற்படும் என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. (குற்றம்) ஆர்.கே. பாரதியாவைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் செய்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பாரதியா சிரெளலி காவல் நிலைய எஸ்.எச்.ஓ சஞ்சய் கார்க் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவரின் கணவர், அண்மையில் ஒரு கிலோ போதை மருந்துடன் பிடிபட்டதை அடுத்து மொராதாபாத் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தனது கணவருக்கு எதிராக சதி செய்ததாகவும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்: "ஐபிசி பிரிவு 376 டி (கூட்டுக் கற்பழிப்பு), 452 (காயப்படுத்தும் நோக்கத்துடன் வீடு புகுதல்) மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிராக 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். நாங்கள் அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கைகள் காத்திருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அவரது கணவருக்கு தெரிந்தவர்கள், இப்போது அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய நாங்கள் குழுக்களை அமைத்துள்ளோம்’ என்றார்.