
கோப்புப்படம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கேரளா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று (திங்கள்கிழமை) பேசுகையில்,
"தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (என்பிஆர்) அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, அதைக் கவனமாகப் படிக்க வேண்டும் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களையும் வலியுறுத்துகிறேன். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதில் உள்ள அபாயம் தெரிவதன் காரணத்தினால்தான் மக்கள் போராடுகின்றனர்.
சிஏஏவுக்கு எதிராக நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். அனைவரும் ஒப்புக்கொண்டால், கொல்கத்தாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) ஆதரவாக உள்ள என்பிஆர்-இல் இடம்பெற்றுள்ள நிபந்தனைப் பிரிவுகளை மத்திய அரசு நீக்க வேண்டும்.
என்பிஆர் என்பது ஒரு அபாயகரமான விளையாட்டு" என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...