இந்தியாவில் கரோனா வைரஸ்: கேரளத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. வூஹான் மாகாணத்தில் இருந்து திரும்பிய கேரள மாணவருக்கு நோவல் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ்: கேரளத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி


சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. வூஹான் மாகாணத்தில் இருந்து திரும்பிய கேரள மாணவருக்கு நோவல் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இதுவரை கரோனா வைரஸ் பாதித்த 170 பேர் பலியாகியுள்ள நிலையில், தற்போது 7,700 பேருக்கு கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீனாவில் இருந்து வெளிநாட்டினர் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அவசரம் காட்டி வரும் நிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வந்த கேரள மாணவருக்கு தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் 8 கர்நாடக மாணவர்கள், இந்தியா திரும்ப ஜனவரி 31ம் தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், சீனாவுக்கு இயக்கப்பட்டு வந்த பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் இந்தியா திரும்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த 8 மாணவர்களும் நோக் ஏர் விமானம் மூலம் பாங்காக் வந்து அங்கிருந்து இந்தியா வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ம் தேதி முதல் விமான சேவைகள் இருக்காது என்பதால், நாங்கள் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் என்று அந்த மாணவர்களில் ஒருவரான பி.எஸ். கிஷண் கூறுகிறார்.

மேலும் அவர் பேசுகையில், சீனாவின் பெரும்பாலான நகரங்கள் போர்ப் பகுதி போல பதற்றத்துடன் காணப்படுகின்றன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. எங்கள் பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதித்திருப்பதால், விடுதி நிர்வாகத்தினர், எங்களை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் என்றும் கிஷண் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com