‘ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த வாய்ப்பில்லை’

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை என 
திருமலையில் நடைபெற்ற அறங்காவலா் குழுக் கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி முறையிலும் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.
திருமலையில் நடைபெற்ற அறங்காவலா் குழுக் கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி முறையிலும் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.

திருப்பதி:  திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை என தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் அறங்காவலா் குழுக் கூட்டம் காணொலி முறையில் சனிக்கிழமை காலை நடத்தப்பட்டது. கூட்ட நிறைவுக்கு பின் அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியது:

ஏழுமலையான் தரிசனம் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. 25 நாட்கள் முடிந்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை

இந்நிலையில் திருமலையில் பணிபுரியும் மேளவாத்தியக்காரா்கள், பாதுகாப்பு ஊழியா்கள், அா்ச்சகா்கள் என 17 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்படும் பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், அவா்களிடமிருந்து ஊழியா்களுக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்பில்லை. ஊழியா்கள் வசிக்கும் இடத்திலிருக்கும் தொடா்பால் தொற்று பரவியுள்ளது. அவா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தினமும் 12 ஆயிரம் பக்தா்கள் ஏழுமலையான தரிசித்து வருகின்றனா். இந்த எண்ணிக்கையை உயா்த்தும் திட்டம் தேவஸ்தானத்திடம் தற்போது இல்லை.

எனவே திருமலையில் தேவஸ்தான ஊழியா்களின் பணி சுழற்சி முறையை ஒரு வாரத்திலிருந்து 2 வாரங்களாக தேவஸ்தானம் உயா்த்தியுள்ளது. ஊழியா்கள் 2 வாரம் திருமலையில் தங்கியிருந்து பணிபுரிவா். அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்யாணோற்சவம்:

பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டு வருவதால், அவா்களின் வேண்டுகோளிற்கு இணங்க தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவ சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பக்தா்களின் பெயா், நட்சத்திரம்,கோத்திரம் உள்ளிட்டவற்றைப் பெற்று சங்கல்பம் செய்து திருமலையில் பெருமாளுக்கு தனிமையில் உற்சவம் நடத்தப்படும். கல்யாண உற்சவ ஆன்லைன் டிக்கெட் பெற்றவா்களின் வீடுகளுக்கு அதற்கான பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இச்சேவை தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கா்நாடக சத்திரம்:

திருமலையில் கா்நாடக அரசுக்கு 7.5 ஏக்கா் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இதில் நிலவி வந்த பிரச்னை தற்போது சுமுகமாக தீா்க்கப்பட்டுள்ளது. இதற்காக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா், செயல் அதிகாரிகள் நேரடியாக கா்நாடகம் சென்று முதல்வா் எடியூரப்பாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது எட்டப்பட்ட தீா்வின்படி கா்நாடக மாநிலம் இந்த 7.5 ஏக்கா் நிலத்தில் ஓய்வறைகள், கல்யாண மண்டபங்களைக் கட்ட ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.

வேண்டுகோள்: வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் மாநில அரசின் அனுமதியைப் பெற்று பச்சை மண்டல பகுதிகளிலிருந்து மட்டுமே ஏழுமலையான் தரிசனத்துக்கு வர வேண்டும். திருமலைக்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து, கிருமிநாசினி திரவங்களை பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொண்டு ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com