கரோனா: மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் சிறிய மாநிலங்கள்

பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு வேகம் உயர்ந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரோனா: மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் சிறிய மாநிலங்கள்


புது தில்லி: பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு வேகம் உயர்ந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கோவா, புதுச்சேரி மற்றும் சில மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் இருந்த போது அதாவது ஜூன் 1ம் தேதி மிகச் சில கரோனா நோயாளிகளே இருந்தனர். ஆனால், தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கிட்டத்தட்ட 10 மடங்கு.

அதாவது சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேசங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்றால், 5 ஆக இருந்த மாநிலங்களில் தற்போது நூறாக உயர்ந்துள்ளது.

உதாரணமாக ஜூன் 1ம் தேதி மிசோரம், சிக்கிம் மாநிலங்களில் ஒரே ஒரு கரோனா நோயாளி தான் இருந்தார். அதே சமயம் ஜூன் 30ல் இதுவே மிசோரத்தில் 160 ஆகவும், சிக்கிமில் 88 ஆகவும் உயர்ந்துள்ளது. நாகலாந்திலும் ஜூன் 1ல் 43 ஆக இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 450 ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூரிலும் இதே நிலைதான், 83இல் இருந்து 1,227 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், மணிப்பூரில் தற்போது ஜூலை 15 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறிய மாநிலங்களிலேயே அதிக கரோனா நோயாளிகள் இருக்கும் மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. இங்கு 1400 கரோனா நோயாளிகள் உள்ளனர். அருணாச்சலம் மட்டுமே கரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கும் மாநிலமாக உள்ளது. இங்கு 22ல் இருந்து 191 ஆக இருக்கிறது.

அதில்லாமல், வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே கரோனாவுக்கு மிகக் குறைவான உயிர் பலியைக் கொண்டுள்ளன. இதுவரை வெறும் மூன்று பேர் தான் மரணம் அடைந்துள்ளனர். திரிபுரா, மேகாலயம், அருணாச்சலில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் கரோனா தொற்று அதிகரித்ததால், தற்போது பொதுமுடக்கத்தை நீட்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஜூலை இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயம், நாகாலாந்து மாநிலங்களில் வெறும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் அதிகரித்திருக்கும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. அங்கு 15 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு முன்பு 73 ஆக இருந்தது, ஜூன் இறுதியில் 1315 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அங்கு தற்போது சுற்றுலாவுக்காக அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்களில் பொது முடக்கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கரோனா பாதிப்பு உயர்ந்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதனை, இந்த குறுகிய கால பொது முடக்கம் தடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com