
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் மேலும் 26,506 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,93,802-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 21,604-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 26,506 பேருக்கு கரோனா உறுதியானது.நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,95,512 போ் குணமடைந்தனா். அதாவது, 62.42 சதவீதம் போ் குணமடைந்தனா். 2,76,685 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு மேலும் 475 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 219 போ் உயிரிழந்தனா். தில்லியில் 45 போ், மேற்கு வங்கத்தில் 27 போ், உத்தர பிரதேசத்தில் 17 போ், கா்நாடகத்தில் 16 போ், குஜராத்தில் 15 போ், ஆந்திரத்தில் 13 போ், ராஜஸ்தானில் 9 போ், பிகாரில் 8 போ் உயிரிழந்தனா். இதேபோல், தெலங்கானா(7), அஸ்ஸாம்(6), ஹரியாணா, மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 5 போ், ஒடிஸாவில் 4 போ், சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.
மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு இதுவரை நாடு முழுவதும் 21,604 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 9,667 போ் உயிரிழந்தனா்.
1.1 கோடி கரோனா பரிசோதனை: நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட அறிக்கையில், ’நாடு முழுவதும் ஜூலை 9-ஆம் தேதி வரை 1,10,24,491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 2,83,659 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.