லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: இந்திய ராணுவம்

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்வதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: இந்திய ராணுவம்
லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: இந்திய ராணுவம்


புது தில்லி: இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்வதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீனப் படைகள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு படைகள் திரும்பப் பெறப்பட்டு விட்டதை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் படைகள் அற்றப் பகுதியாக மாறின.

இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்காவது கட்ட ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்தது.  லடாக்கின் சுஷுல் பகுதியில் ஜூலை 14 முதல் 15-ம் தேதி காலை வரை சுமார் 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பும், தங்களது எல்லைப் பகுதியில் பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போதிருக்கும் இடத்தில் இருந்து இரு படைகளும் நகர்ந்து பழைய இடத்துக்குச் செல்வது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், லடாக்கின் கிழக்கு பகுதியில் இருந்து முதல் கட்டமாக படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் படைகளை வாபஸ் பெற்று கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர். இரு தரப்பிலும் ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. பாயிண்ட் 14 மற்றும் 15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீன ராணுவம் முழுவதும் அப்புறப்படுத்திவிட்டு பின் வாங்கியது. 

கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ், பாங்கோக் டிசோ பகுதிகளில் இருந்து சீன படைகள் பகுதியாக திரும்பப் பெறப்பட்டன. அங்கு சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அப்புறப்படுத்தப்பட்டன.  அடுத்து வரும் நாள்களில் மேலும் சில பகுதிகளில் இருந்து சீனப் படைகள் பின்வாங்கும் நடவடிக்கைகள் நடைபெற உள்ளன. ஆனால், மிக ஆழமான சில பகுதிகளில் தொடர்ந்து இரு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது அப்படியே இருக்கிறது.

எனவே, சீனப் படைகள் பின்வாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது என்பதால், தொடர்ச்சியாக ஆய்வு செய்து, படைகள் திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com