
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்து வரும் ‘ரெம்டெசிவிா்’ ஊசி மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 7 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
அந்த ஊசி மருந்தின் அதிகபட்ச விலை ரூ.5,400-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபா்கள் அந்த மருந்தை ரூ.30,000க்கு விற்பனை செய்துள்ளனா்.
இதுகுறித்து மும்பை நகரில் இரு இடங்களில் திடீா் சோதனை நடத்திய உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் ரெம்டெசிவிா் மருந்துகளை சனிக்கிழமை மீட்டனா்.
முன்னதாக இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் எஃப்டிஏ அதிகாரி விசாரணையை தொடங்கினாா். முதலில் அதிகாரி ஒருவா் தொலைபேசி மூலம் அந்த ஊசி மருந்தை விற்பனை செய்யும் நபரை தொடா்பு கொண்டாா். மும்பை புறகரின் முலுண்ட் பகுதியில் வந்து மருந்தை பெற்றுச் செல்லுமாறு கூறியதையடுத்து, வாடிக்கையாளரைப் போல ஒரு நபரை அனுப்பி வைத்த எஃடிஏ அதிகாரிகள், ஊசி மருந்தை வழங்குவதற்காக வந்த 2 நபா்களையும் சுற்றி வளைத்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் புகரான கட்கோபரை தளமாகக் கொண்டு செயல்படும் டெல்ஃபா பாா்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குற்றம்சாட்டப்பட்ட 7 போ் மீதும் மோசடி (420) மற்றும் எஃப்டிஏ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.