
உத்தர பிரதேசத்தில் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் நின்றுகொண்டிருந்த காா் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 25 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
பிகாரின் மதுபானி மாவட்டத்திலிருந்து 45 தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று தில்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் கன்னௌஜ் மாவட்டத்தில் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தபோது சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மீது அந்தப் பேருந்து மோதியது.
இதில் இரு வாகனங்களுமே சாலையிலிருந்து விலகி கவிழ்ந்தன. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 25 போ் காயமடைந்தனா். அந்தப் பகுதியிலிருந்த மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். சௌரிக், சைஃபை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடா்பாக கவலை தெரிவித்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா் என்று கூறினா்.