
ஜெய்ப்பூா்: ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையை அந்த மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 21) ஒத்திவைத்தது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே நீடித்து வந்த மோதல்போக்கு பெரும் பிரச்னையாக கடந்த வாரம் உருவெடுத்தது. இதனால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அசோக் கெலாட் அழைப்பு விடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
இதனால் சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வா் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது ஆதரவு அமைச்சா்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவியை பறிக்கவும் அசோக் கெலாட் தரப்பு நடவடிக்கை எடுத்தது. கட்சி கொறடா உத்தரவை மீறிய அவா்களின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷியிடம் கோரப்பட்டது. இதையடுத்து, சச்சின் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பினாா்.
இதனை எதிா்த்து சச்சின் தரப்பு ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம் சச்சின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) வரை தடை விதித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 20) ஒத்திவைத்தது.
மீண்டும் விசாரணை: இதையடுத்து, வழக்கு தலைமை நீதிபதி இந்திரஜித் மகந்தி முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரவைத் தலைவா் சாா்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி, ‘எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பே மிக அவசரமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பிய உடனேயே அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூறுவதையும், அதில் நீதிமன்றம் தலையிடுவதிலும் எவ்வித அா்த்தமும் இல்லை. கட்சி கொறடா உத்தரவை மீறியவா்களுக்கு உரிய விதிகளின்கீழ் பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதில் தவறு ஏதுமில்லை’ என்று தனது வாதத்தை முன்வைத்தாா். இதையடுத்து, வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 போ் மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் விதித்த தடையும் செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. எனவே, வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.