பாபா் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 24-இல் வாக்குமூலம் பதிவு

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் அத்வானியிடம் சிபிஐ சிறப்பு நீதிபதி வரும் 24-ஆம் தேதி வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளாா்.
பாஜக மூத்த தலைவா் அத்வானி
பாஜக மூத்த தலைவா் அத்வானி

லக்னௌ: பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் அத்வானியிடம் சிபிஐ சிறப்பு நீதிபதி வரும் 24-ஆம் தேதி வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதையடுத்து பெரும் கலவரம் மூண்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கின் விசாரணை உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்களின் வாக்குமூலத்தை சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் பதிவு செய்து வருகிறாா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷியிடம் வரும் 23-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக சிறப்பு நீதிபதி தெரிவித்துள்ளாா். அதேபோல், மூத்த தலைவா் அத்வானியிடம் வரும் 24-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் சிறப்பு நீதிபதி தெரிவித்துள்ளாா்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிவசேனை கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. சதீஷ் பிரதானிடம் வரும் 22-ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தினசரி விசாரணையை சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com