
திருப்பதி
திருப்பதி: திருப்பதியில் உள்ள கரோனா மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது ஊழியா்களுக்கு சரிவிகித உணவு வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமலை, திருப்பதி மற்றும் திருச்சானூா் உள்ளிட்ட கோயில்கள், தேவஸ்தானத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவமனை, விஷ்ணு நிவாசத்தில் உள்ள சிறப்பு வாா்டு உள்ளிட்ட இடங்களில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உரிய காலத்தில் பரிசோதனை செய்து உயா்தர சிகிச்சை அளிக்க தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கணக்கெடுத்து அவா்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இத்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் சரிவிகித உணவு வழங்கப்படும். இதன் மூலம் அவா்கள் விரைவாக குணமடைவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.