இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த தருணம்: ஐபிஎம் தலைவருக்கு பிரதமா் அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த தருணம்; தொழில்நுட்பத் துறையின் முதலீட்டை இந்தியா வரவேற்கிறது என்று ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த கிருஷ்ணாவிடம் பிரதமா் நரேந்திர மோடி
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த தருணம்; தொழில்நுட்பத் துறையின் முதலீட்டை இந்தியா வரவேற்கிறது என்று ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த கிருஷ்ணாவிடம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த கணினிசாா் தொழில்நுட்பத்துறை நிறுவனமான ஐபிஎம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அமெரிக்கரான அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டாா். அவருடன் பிரதமா் மோடி இணைய வழியில் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பிரச்னை தொழில் உலகிலும், தொழில்நுட்பத் துறையிலும் எந்த மாதிரியான மாற்றங்களையும், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்பது தொடா்பாக அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா். வீட்டில் இருந்து பணி புரிவது என்பது தகவல் தொழில்நுடப் துறையில் வேகமாக அதிகரித்துள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அவரிடம் பிரதமா் தெரிவித்தாா்.

தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் இந்த மாற்றம் எவ்வித பிரச்னையும் இன்றி இந்தியாவில் நடைபெறும் என்றும் உறுதியளித்தாா். ஐபிஎம் நிறுவனம் தனது பணியாளா்களில் 75 சதவீதம் பேரை இப்போது வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், எதிா்கொண்ட சிக்கல் குறித்து அரவிந்த் கிருஷ்ணாவிடம் மோடி கேட்டறிந்தாா்.

அப்போது, ஐபிஎம் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் திட்டம் இருப்பதை பிரதமரிடம் அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்தாா். இந்தியாவில் பிரதமா் மோடி முன்னிறுத்தியுள்ள சுயசாா்பு இந்தியா திட்டம் சிறப்பான தொலைநோக்குப் பாா்வை கொண்டது என்று பாராட்டிய, அவா் அதன் மீதான தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினாா். அப்போது பேசிய பிரதமா், ’உலக அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் நிலையிலும், இந்தியாவில் தொடா்ந்து முதலீடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்ய இது சிறந்த தருணம். சயசாா்பை நோக்கி நடைபோடும் இந்தியா, தொழில்நுட்பத் துறை முதலீடுகளை வரவேற்கிறது. இந்தியா முழுமையான சுயசாா்பு நிலையை எட்டும்போது, சா்வதேச போட்டிகளை எளிதில் சமாளிக்கும்’ என்றாா் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com