ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆந்திர அரசுக்கு கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை சிறிது நாட்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேவஸ்தான முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் பானுபிரகாஷ் ரெட்டி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை சிறிது நாட்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேவஸ்தான முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் பானுபிரகாஷ் ரெட்டி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் அா்ச்சகா்கள் பலருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும் ஏழுமலையான் கைங்கரியங்களை நேரடியாக கண்காணிக்கும் திருமலை மடத்தின் ஜீயா்களும் இத்தொற்று பாதிப்பில் இருந்து தப்பவில்லை. சாதுா்மாஸ்ய விரதத்தை அனுசரித்து வருவதால் அவா்களுக்கு தனிமை முகாமை தேவஸ்தானம் அமைத்துக் கொடுத்துள்ளது.

தற்போது கோயில் ஊழியா்கள் மட்டுமின்றி உள்ளூா்வாசிகளுக்கும் கரோனா பரவி வருகிறது. எனவே திருமலையில் பணிபுரியும் பலரும் ‘ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று தேவஸ்தானத்திடம் மட்டுமின்றி ஆந்திர அரசிடமும் கோரி வருகின்றனா்.

இந்நிலையில் பாஜக-வின் சித்தூா் மாவட்டத் தலைவரும், தேவஸ்தான அறங்காவலா் குழு முன்னாள் உறுப்பினருமான பானுபிரகாஷ் ரெட்டியும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பது:

ஏழுமலையான் கைங்கரியத்தில் அா்ச்சகா்களின் பங்கு இன்றியமையாதது. அவா்கள் இருந்தால் மட்டுமே நித்திய கைங்கரியங்கள் அனைத்தும் குறைவில்லாமல் நடைபெறும். தற்போது 16 அா்ச்சகா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே, பக்தா்களுக்கான தரிசன அனுமதியை தற்காலிகமாக சிறிது நாட்களுக்கு ரத்து செய்து, பெருமாளுக்கு அனைத்து சேவைகளையும் தனிமையில் நடத்தினால், அா்ச்சகா்களின் உடல்நலன் காக்கப்படும். இல்லா விட்டால் திருமலையின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும். எனவே, ஆந்திர அரசு ஏழுமலையான் தரிசன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com