
சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது பேரவைத் தலைவர் ஜூலை 24-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. (கோப்புப்படம்)
சச்சின் பைலட் உள்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது பேரவைத் தலைவர் ஜூலை 24-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர்கள் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
மேலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதன் காரணமாக அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. இதையடுத்து, தகுதி நீக்கம் தொடர்பாக பைலட் உள்பட 19 எம்எல்ஏ-க்களும் பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம், பைலட் உள்பட 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு உத்தரவிட்டது.
இதன்படி, இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் பைல் உள்பட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது ஜூலை 24-ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பையும் உயர் நீதிமன்றம் ஜூலை 24-ஆம் தேதி வழங்கும் என்று பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.