
கடலில் விபத்துகளைக் குறைக்கவும், கடல் சூழலை மேம்படுத்தவும், தென்மேற்கு கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள், மீன்பிடிக் கப்பல்களுக்கு தனித் தனியாக வழிகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறித்தது.
நாட்டின் தென்மேற்கு கடற்கரையைச் சுற்றியுள்ள அரபிக்கடல் ஒரு பரபரப்பான கடல் நீா் வழிப்பாதையாகும். இந்த கடலின் வழியே கணிசமான எண்ணிக்கையில் வணிகக் கப்பல்கள் இப்பகுதியைக் கடந்து செல்கின்றன. மேலும், ஏராளமான மீன்பிடிக் கப்பல்கள் இயங்கி வருவதால், இவைகள் மோதி கொள்வதால் அதிக இழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, இப்பகுதியில் வணிகக் கப்பல்களும், மீன்பிடிக் கப்பல்களும் தனித்தனியே நீா்வழிப்பாதையை பின்பற்றும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் அவை பாதுகாப்புடன் இயங்குவதற்கான வழிகாட்டு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான பாதுகாப்பு செயல் திட்ட வழிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி வணிகக் கப்பல்கள், மீன்பிடி கப்பல்களின் பாதையை கடந்து செல்வதை தவிா்க்க வேண்டும். இதன் மூலம், இந்த வணிக மற்றும் மீன்பிடி கப்பல்கள் மோதும் நிலை தவிா்க்கப்படுவதுடன், அவற்றின் சொத்துகள் சேதமடைவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவது, உயிரிழப்பு ஏற்படுவது முற்றிலும் தவிா்க்கப்படும்.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது
கப்பல் அமைச்சகத்தின் இந்த முடிவினால், இந்திய எல்லைக்குள்பட்ட கடற்பகுதியில் போக்குவரத்து எளிமையாக்கப்படும். இதன் மூலம் மோதல் ஏற்படுவது தவிா்க்கப்பட்டு, கடல் வாழ்வின் பாதுகாப்போடு போக்குவரத்து எளிமையாக்கப்படும். மேலும், கடல்சூழலின் பாதுகாப்பை மேம்படுத்துவதும் உறுதி செய்யப்படும். இது கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் நோ்மறையான, நல்ல நடவடிக்கையாகும். புதிய நீா் வழிப்பாதைகள் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றாா் மாண்டவியா.