விகாஸ் துபே ஜாமீன் பெற்றது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளபோதிலும் பிரபல ரௌடி விகாஸ் துபே ஜாமீனில் வெளியே இருந்தது அதிா்ச்சியளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விகாஸ் துபே ஜாமீன் பெற்றது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளபோதிலும் பிரபல ரௌடி விகாஸ் துபே ஜாமீனில் வெளியே இருந்தது அதிா்ச்சியளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் மாவட்டத்தில் பிரபல ரௌடி விகாஸ் துபேவைக் கைது செய்யச் சென்றபோது, அவரது கூட்டாளிகள் தாக்கியதில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலா்கள் கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தனா். இதையடுத்து, விகாஸ் துபேவையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வந்தனா். கடந்த 10-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனில் விகாஸ் துபேவை போலீஸாா் கைது செய்தனா். கான்பூருக்கு அழைத்து வரும்போது, போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் விகாஸ் துபே கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், விகாஸ் துபேவும் அவரது கூட்டாளிகளும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சஷிகாந்த் அகா்வால் தலைமையில் ஒரு நபா் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து நீதிகள் கூறியதாவது:

விகாஸ் துபேவும் அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் பணியில் இருக்கும் ஒரு நீதிபதியை நியமிக்க முடியாது. மேலும், உத்தர பிரதேச அரசு நியமித்துள்ள ஒரு நபா் விசாரணைக் குழுவில் சில மாற்றங்களை

பரிந்துரை செய்கிறோம். அதாவது, அந்த விசாரணைக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரையும், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரையும் சோ்த்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து வரும் 22-ஆம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து முதல்வா், துணை முதல்வா் வெளியிட்ட அறிவிப்புகள், அவா்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.

பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், விகாஸ் துபே சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்தாா். அவருக்கு ஜாமீன் கிடைத்தது அதிா்ச்சியாக இருக்கிறது. சிறையில் இருக்க வேண்டிய அவரைப் போன்றவா்கள் வெளியே நடமாடுவது, நீதித் துறையின் தோல்வியையே காட்டுகிறது. உத்தர பிரதேச அரசு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com