18 மாதங்களாக மூடிக்கிடந்த வீட்டிற்குள் பெண்ணின் எலும்புக் கூடு!

மகாராஷ்டிர  மாநிலத்தில் உள்ள போய்சர் நகரில் வாடகைக்கு விட்டிருந்த  வீட்டின் அறையை உரிமையாளர்  திறந்து பார்த்தபோது  ஓர் எலும்புக் கூடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
womans-skeleton-found-in-locked-home-after-18-months
womans-skeleton-found-in-locked-home-after-18-months

மகாராஷ்டிர  மாநிலத்தில் உள்ள போய்சர் நகரில் வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் அறையை உரிமையாளர்  திறந்து பார்த்தபோது  பிளாஸ்டிக் தண்ணீர்  டிரம்மில் ஓர் எலும்புக் கூடு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக, வீட்டின் உரிமையாளரான லோகேஷ் மிதலால் ஜெயின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிப்ரவரி 2019 இல் வீட்டில் ஒத்திக்கு இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி,  விரைவில் திரும்பி வருவதாகவும், அந்த அறையை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு சென்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் சொந்த ஊரான பிகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பெல்வாரா கிராமத்தில் இருந்தே மின்னணு பரிமாற்றத்தின் மூலம் ரூ. 4,000 மாத வாடகையையும் தொடர்ந்து செலுத்தி வந்தனர்.

இருப்பினும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை தருவதை திடீரென நிறுத்திவிட்டனர் என்று போய்சர் காவல் நிலைய விசாரணை அதிகாரி பிரதீப் காஸ்பே தெரிவித்தார்.

மேலும், ஆறு மாதங்களாக வீட்டு வாடகை தராததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார் வீட்டின் உரிமையாளர் ஜெயின்.

முதற்கட்ட விசாரணையின்படி, அந்த எலும்புக்கூடு புல்புல் தீபக் ஜா (வயது 20) என்பவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண்,  தனது கணவர் தீபக், 25, அவரது மாமனார் பவன் ஜா, 50, மாமியார் பச்சுதேவி, 45, மற்றும் கணவரின் சகோதரி நீட்டு முகேஷ் தாகூர் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்தவர்.

ஜெயின் தெரிவித்ததின்படி, 2019 பிப்ரவரியில், புல்புல் ஜா தனது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு காவல்துறையிலும் புகார் அளித்திருந்தார்.

பின்னர் தீபக்கைக் காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்தனர். அதன் பிறகு குடும்பத்தினர் புல்புலிடம் புகாரை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தியும் அவர் மறுத்துவிட்டார். அதனால் புல்பூல் தீபக் ஜாவை அவர்கள் கொன்றுவிட்டு, பிகாரில் உள்ள தங்கள் சொந்த வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் பால்கர் போலீசார், பிகாரில் உள்ள பெல்வாரா கிராமத்திற்கு விரைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com