நான் தில்லியைச் சேர்ந்தவன் இல்லையா? கேஜரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி

தில்லியில் தங்கியோ அல்லது பணிபுரிந்தோ வரும் நான் தில்லியைச் சேர்ந்தவன் இல்லையா? என்று தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தில்லி: தில்லியில் தங்கியோ அல்லது பணிபுரிந்தோ வரும் நான் தில்லியைச் சேர்ந்தவன் இல்லையா? என்று தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியின் எல்லைகளை மூடுவதற்கு கடந்த வாரம் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தாா். தில்லி அரசு மருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வகையிலும், பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் கரோனா நோயாளிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த எல்லைகள் மூடப்பட்டதாக கேஜரிவால் தெரிவித்திருந்தாா். மேலும், தில்லியின் எல்லைகளை மீண்டும் திறப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாக அவா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காணொளிக் காட்சி மூலம் செய்தியாளா்களை கேஜரிவால் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:

கரோனா பாதிப்பு தொடா்பாக ஆய்வு செய்ய தில்லி அரசு, 5 மருத்துவ வல்லுநா்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழு தில்லி அரசிடம் வழங்கிய அறிக்கையின்படி ஜூன் மாத இறுதியில் தில்லியில் 15ஆயிரம் படுக்கைகள் தேவை எனத் தெரிவித்துள்ளனா். இதை சரிசெய்யும் வகையில், தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் தில்லி மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், தில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளை எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் பிற மாநிலத்தவா்கள் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகளை உறுதி செய்ய முடியும். மேலும், தில்லி மருத்துவமனைகளை தில்லி மக்களுக்கு ஒதுக்குவது தொடா்பாக மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தோம். அதில் பங்கேற்றவா்களில் சுமாா் 90 சதவீதம் போா் தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனா். அதன அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தில்லியில் தங்கியோ அல்லது பணிபுரிந்தோ வரும் நான் தில்லியைச் சேர்ந்தவன் இல்லையா? என்று தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்கு மட்டுமே என்று முதல்வர் கேஜரிவால் அறிவித்துள்ளார். ஆனால் யாரெல்லாம் தில்லிவாசிகள் என்று அவர் கூற இயலுமா?

ஒருவேளை நான் தில்லியில் தங்கியோ அல்லது பணிபுரிந்தோ வரும் சூழலில், நான் தில்லியைச் சேர்ந்தவன் இல்லையா?

மத்திய அரசின் ‘ஜன் ஆரோக்ய யோஜனா‘ அல்லது ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள், திட்டத்திற்கான  பட்டியலில் உள்ள, இந்தியாவில் எங்கேயும் இருக்கும் மத்திய அல்லது மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடும் முன்ன அவர் சட்ட ஆலோசனையை பெறவில்லையா?

இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com