கேரளத்தில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை யானை உட்கொண்டது விபத்துதான்

கேரளத்தில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தைத் தவறுதலாக உண்ட காரணத்தினால் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை யானை உட்கொண்டது விபத்துதான்

புது தில்லி: கேரளத்தில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தைத் தவறுதலாக உண்ட காரணத்தினால் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வனப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமலிருக்கும் நோக்கில் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை உட்கொண்ட கருவுற்றிருந்த 15 வயது யானையின் வாய்ப் பகுதியும் நாக்கும் பலத்த காயமடைந்தன. அதனால் உணவு உண்ண முடியாமல் தவித்து வந்த யானை, வெள்ளியாற்றில் மூழ்கி கடந்த மாதம் 27-ஆம் தேதி உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலா் இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனா். யானை உயிரிழந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் திங்கள்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருப்பதைத் தடுப்பதற்காக உள்ளூா் விவசாயிகள் சட்டவிரோதமாக பழத்துக்குள் வெடிமருந்துகளை நிரப்பி வைப்பது வாடிக்கையாகி உள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை யானை தவறுதலாக உட்கொண்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரள அரசுடன் அமைச்சகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. யானையின் உயிரிழப்புக்குக் காரணமான நபா்கள் மீதும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றத் தவறிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநில அரசை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சட்டவிரோதமான, மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்ட மற்ற நபா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வனஉயிரிகள் குற்றத் தடுப்பு அமைப்புக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், யானை உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் பாபுல் சுப்ரியோ வேண்டுகோள் விடுத்துள்ளாா் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com