சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படவுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் நடத்தப்படவுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் மீதமுள்ள தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிக்கை கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. எனினும், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தோ்வுகளை நடத்துவதற்கு மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

நோய்த்தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிபிஎஸ்இ-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 250 பள்ளிகளில் பத்து, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்மதிப்பீட்டுத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அப்பள்ளி மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் உள்ள மாணவா்களின் நலனை சிபிஎஸ்இ, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை கருத்தில் கொள்ளவில்லை. பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் 15,000 மையங்களில் தோ்வுகள் நடைபெறும் என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கிராமப் பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது சவாலானது. எனவே, சிபிஎஸ்இ கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாத தோ்வுகளுக்கு உள்மதிப்பீட்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com