கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் இந்தியா

உலக அளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியிலில் 6வது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது.
கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் இந்தியா


புது தில்லி: உலக அளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியிலில் 6வது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது.

நாட்டில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,87,155 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,40,979 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 8,107 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,38,069 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளில் கரோனா பாதிப்பில் தற்போது 6ஆவது இடத்தில் உள்ள இந்தியா, ஒரே நாளில் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறும் நிலையில் உள்ளது.

அதாவது, இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு 2,87,155 ஆக உள்ளது. 5வதுஇடத்தில் உள்ள ஸ்பெயினில் கரோனா பாதிப்பு 2,89,360 ஆகவும், 4வது இடத்தில் உள்ள பிரிட்டனில் 2,90,143 ஆகவும் உள்ளது. இன்றும் வழக்கம் போல நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படும் பட்சத்தில் இவ்விரு எண்களையும் இந்தியா ஒரே நாளில் எட்டி, 4வது இடத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், மேற்கண்ட நாடுகளிலும் இன்று கரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், இந்தியா தொடர்ந்து 6வது இடத்திலேயே இருக்கலாம்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா கடந்த 25 ஆம் தேதி, 10வது இடத்தைப் பிடித்த நிலையில், 29 ஆம் தேதி 9வது இடத்துக்கு வந்தது. தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி 7 ஆம் இடத்தில் இதுந்து, தற்போது இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் உள்ளது.


கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. தொடர்ந்து ரஷியா, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

7வது இடத்தில் இத்தாலி, பெரு 8-ம் இடத்திலும், ஜெர்மனி 9வது இடத்திலும், ஈரான் 10வது இடத்திலும் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com