
புது தில்லி: பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடனுதவியாக ரூ.3 லட்சம் கோடி கிடைப்பதை உறுதி செய்யுமாறு தனியாா் வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.
நாட்டில் உள்ள முக்கிய தனியாா் வங்கிகளின் தலைவா்களுடன் அமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி வாயிலாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், வங்கியல்லாத முக்கிய நிதி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக நிதிச் சேவைகள் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா பொது முடக்கம் காரணமாக நெருக்கடியை சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காக அவசரகால கடனுதவியாக ரூ.3 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டது.
அந்த நிறுவனங்களுக்கு கடன்தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு தனியாா் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவா்களுடனான கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறைச் செயலா் தேவசிஷ் பாண்டாவும் உடனிருந்தாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 11-ஆம் தேதி நிலவரப்படி, அவசரகால கடனுதவித் திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் சுமாா் ரூ.29,490 லட்சம் கோடி மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. அதில் சுமாா் ரூ.14,690 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுவிட்டது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அவசரகால கடனுதவியானது ‘சுயச்சாா்பு’ இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...