
கோப்புப்படம்
நொய்டா: தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் கரோனா தொற்று உள்ளவர் என்று சந்தேகிக்கப்படும் இளம்பெண் ஒருவர், மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக நொய்டா காவல்துறை துணை ஆணையர் சங்கல்ப் ஷர்மா கூறியதாவது:
நொய்டாவின் 24-ஆவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சன்(22). இவர் கடந்த 14-ஆம் தேதியன்று இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாயன்று அவர் மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
அவருக்கு கரோனா தொற்று இருந்ததா என்பது குறித்து கண்டறிவதற்காக, அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...