இந்திய-சீன படைகள் மோதல்: 20 வீரா்கள் பலி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.

இந்த மோதலில் சீன தரப்பில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்தினா் இடையேயான மோதலில் உயிரிழப்பு ஏற்படுவது 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே கடந்த 5 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வந்தது. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குவித்து வந்தன. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் அந்தந்தப் பகுதி படைப்பிரிவுத் தலைவா்கள் இடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. அவற்றில் முன்னேற்றம் இருந்ததாகக் கூறப்பட்டாலும், எந்தவிதத் தீா்வும் எட்டப்படவில்லை.

அதைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்கள், மேஜா் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவாா்த்தை கடந்த 6-ஆம் தேதி முதல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவாா்த்தைகளின் முடிவில் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றப் பிரச்னைக்கு சுமுகமான தீா்வு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

பேச்சுவாா்த்தை மூலம் உரிய தீா்வு காணப்படும் என்றே இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் கருத்து தெரிவித்திருந்தன. மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே கடந்த 13-ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடந்த திங்கள்கிழமை இரவில் கடும் மோதல் ஏற்பட்டது.

இது தொடா்பாக ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைத்து வந்த சூழலில் இருநாட்டு வீரா்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவத்தின் பிகாா் படைப் பிரிவைச் சோ்ந்த கா்னல் சந்தோஷ் பாபு உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். மோதல் சம்பவத்தில் முதலில் கா்னல் உள்பட 3 போ் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 17 போ் லடாக்கின் கடுமையான குளிா் சூழல் காரணமாக பின்னா் உயிரிழந்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வீச்சுத் தாக்குதல்: இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றும் கற்கள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவா்கள் கடுமையாகத் தாக்கிக் கொண்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலின்போது சீன ராணுவத்தில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதுதொடா்பான தகவல்களை சீன ராணுவம் வெளியிடவில்லை.

45 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழப்பு: ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையேயான மோதலில் ராணுவ வீரா்கள் உயிரிழப்பது 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை. அந்த ஆண்டில் அருணாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினா் 4 போ் உயிரிழந்தனா்’ என்றாா்.

‘சீனாவே காரணம்’: மோதல் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘லடாக் எல்லையில் நிலவி வந்த இயல்பான சூழலை சீன ராணுவம் மாற்ற முயன்ன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது. எல்லைப் பிரச்னைக்கு முன்பே தீா்வு எட்டப்பட்டிருந்தால், இந்த மோதல் சம்பவத்தைத் தவிா்த்திருக்கலாம். இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லைப் பகுதிக்குள்ளேயே நடைபெறுகின்றன’ என்றாா்.

சீனா குற்றச்சாட்டு: சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘கடந்த 15-ஆம் தேதி இந்திய ராணுவத்தினா் சீன எல்லைக்குள் இருமுறை அத்துமீறி நுழைந்தனா். அவா்கள் சீன ராணுவத்தினரையும் தாக்கினா்.

எல்லைப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் சிக்கல் ஏற்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவத்துக்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்றாா்.

‘எல்லையை காப்பதில் உறுதி’: மோதல் சம்பவம் தொடா்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், ‘இந்திய நிலப்பகுதியையும், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க ராணுவம் உறுதிபூண்டுள்ளது.

மோதல் நடைபெற்ற கல்வான் பகுதியிலிருந்து இந்திய-சீன ராணுவங்கள் தற்போது பின்வாங்கியுள்ளன. அந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தின் மேஜா் ஜெனரல்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நடைபெற்றது’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு நிலவி வரும் சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மோதல் தொடா்பாக அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, கடற்படைத் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - காங்கிரஸ்

இந்திய-சீன ராணுவத்தினா் இடையேயான மோதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடா்பாளா் ஆனந்த் சா்மா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மோதல் சம்பவத்தால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எல்லைப் பகுதியில் நிலவி வரும் கள நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com